Wednesday, August 16, 2017

ஒரு வினோத வருகை

இன்று நாகர்கோவிலில் நல்ல மழை.பகலெல்லாம் இதோ இந்த முட்டையை இப்போது இடப்போகிறேன் எல்லாரும் தள்ளிப் போயிடுங்க என்று மூக்கை உற்று நோக்கும் கோழி போல காட்சிப்பிழை கட்டுரைக்காக கணினியைப் பார்த்தவாறே கழித்த பிறகு ஒன்றும் தேறாமல் அபானன் மேலேறித் தலைவலியாகி பையனையும் கிளப்பிக்கொண்டு குடைகொண்டு வீடிறங்கி பிராமணாள் கபே யில் -நிச்சயமாக கும்பகோணம் பில்டர் காபி!-என்று சொல்லப் பட்ட காப்பியைக் குடிக்கப் போனேன்.
Photo
வழக்கம்போலவே சாமி கேசரி இருக்கு சார் வேணுமா ?என்று கேட்டார் .நெய் என்ற வார்த்தையை ரவை பக்கமே அண்ட விடாமல் பண்ணப்படுகிற அந்த கேசரியை நான் ஏற்கனவே எதிர்கொண்டவனாதலால் நன்றி வேண்டாம் என்று சொன்னேன்.ஆனால் அறியாப் பையன் அதற்குள் தெரியாமல்த் தலையாட்டிவிட்டான்.சரி கேசரி யோகம் யாரை விட்டது என்ற stoic மன நிலையோடு அவன் கேசரியை விழுங்க போராடுவதைப் பார்த்தவண்ணமே இருக்கையில் -ஏறக்குறைய ஒரு கிளாடியேட்டர் சிங்கத்தோடு போராடுவது போலதான் அது இருந்தது -அவர் எதிரே வந்து அமர்ந்தார்,நன்றாக நனைந்திருந்தார்.என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
''வணக்கம் ''என்றார் .பிறகு மகனுடன் கை குலுக்க முயன்றார் ''உங்கள் பையன்.இல்லையா

எனக்கு கொஞ்சமும் பிடி கிட்டாமல் ''ஹலோ ''என்றேன்.இவர் யார் ?என்னால் பார்வை பாதிக்கப்பட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவரா ?நினைவுக்கு வரவில்லையே?

நான் மகனிடம் சற்று அவசரமாக ''சீக்கிரம் தின்னுடா''என்றேன்
அவன் ''முடியலை ''என்றான் பரிதாபமாக

அவர் மீண்டும் ஒருமுறை புன்னகைத்து ''இந்த வருஷம் உங்க கவிதைப் புத்தகம் எதுவும் இல்லையா ?''என்றார்

எனக்கு லேசாக புரிய ஆரம்பித்து ''ஓ ''என்றேன் ''நான் எழுதினதை படிச்சிருக்கீங்களா ?''

எழ முயன்ற மகனிடம் ''பரவால்ல மெதுவாவே சாப்பிடு ''என்றவன் அவன் முகத்தைப் பார்த்து மறுபடியும் ''இல்லே வேணாம்னா விட்டுடு ''என்றேன்

அவர் ''எல்லாத்தியும் ''என்றார்

நான் ''சரி ''என்றேன் ''எங்கே இந்தப் பக்கம் ?வீடு பக்கமா ?''

அவர் ''உங்களைப் பார்க்க வந்தேன்.அற்புதமா எழுதுறீங்க ''என்றார் ''வீடு பெல்காம் ''என்றார்
Photo
நான் ''எங்கே?''என்றேன்
''பெல்காம்.கர்நாடகா மகாராஷ்டிரா பார்டரில இருக்கு ''என்றான் மகன்.அவனுக்கு சமீப காலமாக கூகிள் மேப்பை நோண்டுவது ஒரு பழக்கமாகியிருந்தது


''கர்நாடகாவா ?ஏதாவது வேலையா நாகர்கோவில் வந்தீங்களா ?"'

''இல்லை .உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் ''என்றார் அவர் ''அதோ பாருங்க லக்கேஜ் .ரயில்ல இருந்து நேரா இங்கே வரேன் ''


நான் எட்டிப் பார்த்தேன்.அங்கே பெட்டிப் படுக்கைகள் இருந்தன.உண்மைதான் சாமி அங்கிருந்தே ''பத்திரமா இருக்கு ''என்று கைதூக்கிக் காண்பித்தார்

நான் சற்று பதட்டமாகி (இது எதுவும் ஜோக்கா ?')'கேசரி சாப்பிடுறீங்களா ?''என்றேன்

பிறகு தலையைச் சொறிந்துகொண்டு ''என்னோடது எதைப் படிச்சீங்க''

அவர் கேசரியை வாயில் போட்டுக்கொண்டே ''எல்லாத்தியும் ''என்றார் ''நேத்து எழுதின பீப் கட்டுரை வரை.உலகின் முதல் அழகிய மலர் ''
Photo
நான் 'சரி''என்றேன் .பிறகு சற்று தயக்கமாக ''நான் இங்கே இருப்பேன்னு எப்படி தெரியும்?''
''அதான் பார்வதிபுரம்னு எழுதி இருந்தீங்களே ?''
நான் ''ஓ ''என்றேன் .ஓட்டைக்கை என்று பின் மண்டையில் ஒரு குரல் கேட்டது.பிறகு ''இன்னொரு கேசரி சாப்பிடுறீங்களா .இங்கே கேசரி நல்லாருக்கும் சாமி இன்னொரு கேசரி ''

இன்னொரு கேசரியா ?சாமி திடுக்கிடுவது எனக்கு இங்கிருந்தே தெரிந்தது

பிறகு மெதுவாக ''பார்வதிபுரம் சரி.இங்கே இந்நேரம் காபி குடிக்க வருவேன்னு எப்படி தெரியும் ?"'

அவர் ''தெரியும்''என்றார் எனக்கு லேசாக வயிறு கலக்குவது போல இருந்தது

''தெரியும்னா ?''

அவர் இதென்ன பிரமாதம் என்பது போல என்னைப் பார்த்தார்.மகனும் கூட ''நீயேம்பா இப்படி முழிக்கறே ?''என்பதுபோல பார்த்தான்

எனக்கு அடுத்து என்ன செய்வதென்று ஒரே குழப்பமாக இருக்க ''நான் இப்பல்லாம் கதைதான் எழுதுறேன் ''என்றேன் பலவீனமாக
Photo
அவர் இரண்டாவது கேசரியையும் முடித்துவிட்டு ஒரு காபியும் வாங்கிக் குடித்தார் .பிறகு ஒரு ஏப்பத்துடன் எழுந்து கைகழுவிக் கொண்டுவந்து என் கையைப் பற்றிக் கொண்டார் ''அப்படிச் சொல்லாதீங்க .கவிதையும் எழுதுங்க.உங்களை எங்கெங்கே படிக்கறாங்கன்னு உங்களுக்கே தெரியலை ''என்றார்

நான் ''சரி ''என்றேன்.அவர் எழுந்து ''அப்போ நான் வரட்டுமா ?''என்றார் .தனது பயணப் பையைத் திறந்து ஒரு சாக்கலேட் பெட்டியை எடுத்து பையனிடம் கொடுத்தார் பிறகு ''ரயில்வே ஸ்டேசனுக்கு நான் வந்த அதே சர்க்குலர் பஸ்ல போயிடலாமா''என்று வழி கேட்டு மழையில் நனைந்தபடியே போய்விட்டார்


மகன் ''யாருப்பா இவரு ''என்று கேட்டான்

எனக்கு அப்போதுதான் அவர் பெயரைக் கேட்கவில்லை என்று உணர்ந்து ''தெரியலியே ''என்றேன்.ஒருகணம் அந்த சாக்கலேட் பெட்டியை வாங்கிச் சந்தேகமாக பார்த்தேன்.மழை வலுத்துப் பெய்ய ஆரம்பித்தது.எனது தலைவலி இன்னும் பெரிதாகி இருப்பது போலத் தோன்ற

ஒரு பெரிய மின்னல் கடைக்குள் வெட்டியது.

எனக்கு சட்டென்று பாப்லோ நெருடாவின் 'நினைவுகளில் 'இருந்து ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது

ரோஜஸ் கிமேன்ஸ் என்ற ஒரு கவிஞரைப் பற்றி நெருடா இவ்விதம் சொல்கிறார் .ஒரு முறை ஒரு பாரில் அவர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு மனிதர் அவரிடம் வந்து ''சார் ''எனக்கு உங்களை ரொம்பப் பிடித்திருக்கிறது .நான் உங்களை ஒருமுறை தாண்டிக் குதித்துக் கொள்ளட்டுமா ?இது என்னுடைய பழக்கம்.எனக்குப் பிடித்தவர்களைத் தாண்டுவது ''

கவிஞர் திகைத்து ''உங்களால் முடியுமா ?''என்கிறார்


''இப்போதில்லை .நீங்கள் இறந்தபிறகு உங்கள் சவப்பெட்டியில் கிடக்கும்போது ''

ரோஜாசுக்கு அவரது வினோதமான வேண்டுகோள் பிடித்திருக்கிறது ''சரி ''என்கிறார்
Photo

பல வருடங்கள் கழித்து சிலேயின் மிக கடினமான பெருமழைக்காலம் ஒன்றில் ரோஜஸ் திடீரென்று நிமோனியாவில் இறந்து போகிறார் .திடீரென்று இறந்து போனதாலும் அது நாட்டின் ஒரு மூலை என்பதாலும் நிறைய நண்பர்களுக்கு அவர் இறப்பு நீண்டகாலத்துக்குத் தெரியவில்லை.மிகச் சிலரே அவர் சவ அடக்கத்தில் கலந்துகொண்டார்கள்

ஆனால் அவருடன் இருந்த அந்த சில நண்பர்கள் அப்போது நிகழ்ந்த ஒரு வினோத சம்பவம் பற்றிப் பின்னர் தெரிவித்தார்கள்.

மழை மிகக் கடுமையாகக் கூரைகளின் மீது இரைச்சலுடன் பெய்துகொண்டிருக்க பலத்த காற்று மரங்களைச் சாய்த்துக்கொண்டிருந்தது மின்னலும் இடியும் மாறி மாறி பூமியின் மீது வீழ்ந்துகொண்டிருந்தபோது சட்டென்று முன் கதவு திறந்தது.

ஒரு அன்னியர்.கருத்த கோட்டில் முழுக்க நனைந்திருக்க உள்ளே நுழைந்தார்.நுழைந்தவர் ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தார்.யாருக்கும் அவரைத் தெரியவில்லை

அவர் அவர்களைக் கவனிக்காமல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூடத்தின் நடுவில் சவப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த கவிஞரின் உடலை மெதுவாக நெருங்கி ஒருமுறை உற்றுப்பார்த்தார்


அவர் அடுத்து செய்த காரியம் மிக விநோதமானது

அவர் சற்று பின்வாங்கி வந்து பிறகு பிறகு ஓடிப் போய் ரோஜாசின் உடலைத் தாண்டினார்!பின்னர் அங்கிருந்து இந்தப்பக்கம் மீண்டுமொரு முறை.பிறகு கதவு திறந்து இருளுக்குள் போய்விட்டார் !


கடைசிவரை அவர் யாரென்று கண்டுபிடிக்கமுடியவேயில்லை .
Bookmark and Share

கனவுப் பிரியன் .. அவளோட ராவுகள்

கன்னியாகுமரியின் கடற்கரையை ஒட்டிய அந்த லாட்ஜை அடைந்த போது இருட்ட ஆரம்பித்திருந்தது. கடந்த சில மாதங்களாக “ டேனி “ ஒவ்வொரு மாதமும் தவறாது பௌர்ணமி அன்று இதே லாட்ஜுக்கு சொல்லிவைத்தார்ப்போல அதே அறைக்கு வர ஆரம்பித்திருந்தான். 

அந்த அறையின் பின்னால் இருக்கும் தொட்டி போன்ற பால்கனியில் இருந்து கொண்டே சூரியன் உதிப்பதையும் அஸ்தமனம் ஆவதையும் காணலாம். 

அறைக்கு வந்து, கொண்டு வந்த பேக்கை ஓரமாக வைத்துவிட்டு குளித்து காப்பி ஆர்டர் செய்து சூடான காப்பியை கையில் ஏந்திய வண்ணம் பால்கனிக்கு வந்து பௌர்ணமி நிலவு வெளிச்சத்தை முழுவதுமாக தாங்கி நிற்கும் கடலை ரசித்துக்கொண்டே அவருக்கு போன் செய்தான். 
Photo
“ அண்ணே ..............வந்திட்டேன். அனுப்பிவைங்க. அதே ரூம் தான் “

“ சரிப்பா.........சரியா 9 மணிக்கு வந்திருவா “

“ சரி .........” என்றவனிடம் இருந்து பெருமூச்சு கிளம்பியது. 

கடலையே வெறித்து பார்த்தான். கடலின் கரையில் நின்றிருந்த சில “ போட்டு “ களில் பச்சை விளக்கு எறிந்து கொண்டிருந்தது. கடலை ஒட்டி நிறைய வீடுகள். சில வீடுகளின் சுவர்கள் இன்னும் பூசப்படவில்லை. இடைய இடையே தென்னை மரங்கள். தூரமாய் வெள்ளை நிறத்தில் சர்ச் தெரிந்தது.

மனதில் ஒரு இறுக்கம். கொஞ்சம் கொஞ்சமாய் தளர நினைத்து பெருமூச்சுடனே காப்பி குடித்தான். காப்பி மட்டுமல்ல பழைய எண்ணங்களும் கசப்பு தான். கசப்பு என்றால் வாழ்வில் அப்படி ஒரு கசப்பு. 

மறக்க நினைத்தாலும் மறக்க இயலாத சம்பவங்களின் கசப்பு. 
முன்னைக்காட்டிலும் தேவலை ஆனாலும் மறக்க முடியுமா தெரியவில்லை. 

டேனியின் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும். 

டேனி ஒரு அம்மாஞ்சி. அப்படித்தான் நண்பர்களால் அழைக்கப்பட்டான். காரணம் ரோஜா பாக்கு கூட வற்புறுத்தி தான் அவனை சாப்பிட வைக்க முடிந்தது. 
Photo
டேனிக்கு மார்க்கெட்டில் கணக்கெழுதும் வேலை. 28 வயது வரை அவன் உழைத்த உழைப்பு ரெண்டு தங்கைகளின் திருமண கடனை அடைக்கவே சரியாக இருந்தது. 

29 வயது ஆரம்பித்ததும் வேகவேகமாக பெண்ணை தேடி பிடித்தார்கள். கல்யாண ப்ரோக்கர் மூலமாக வெளியூரில் ஒரு பெண் கிடைத்தாள். முடிந்த அளவு கடனை எல்லாம் வாங்கி சீரும் சிறப்புமாக திருமணம் நடத்தினான். 

திருமணம் ஆன அன்று அவள் அருகில் நெருங்கிய போது “ எனக்கு மனது சரியில்லை. பிறகு பார்க்கலாமே “ என்று பவ்யமாக கோரிக்கை வைக்க டேனி விலகி படுத்துக்கொண்டான். 

தினமும் ஒரு காரணம் சொன்னாள் அவள். டேனி கட்டிலின் ஓரம் தூங்க தேர்ந்தெடுத்துக்கொண்டான். இப்படியே ஒரு வாரம் கழிந்தது பின் மாதவிலக்கு என்றாள் 15 நாள் கழிந்தது. 

சரியாய் 21 நாட்கள் கழித்து விருந்து என தன் வீட்டுக்கு சென்றவள் தனது குடும்பத்தாரிடம் திட்டமிட்டே, தொட்டு மட்டுமே பார்த்திருந்த டேனியை பற்றி அபாண்டமாய் பழி சுமத்தினாள். 

“ அவர் ஆண்பிள்ளை இல்லை. நீங்க நினைக்கிறபடி இதுவரை எதுவுமே நடக்கலை “ 

டேனி சுக்குநூறாய் உடைந்து போனான். இரு குடும்பம் மட்டுமல்ல தெருவே கூடியது. ஆளாளுக்கு இஷ்டம் போல பேசினார்கள். 
Photo
அவமானத்தின் எல்லை வரை சென்று வந்தான். பேச்சுக்கு இடையே “ டாக்டரிடம் செல்லலாம் உண்மை என்னவென்று அறிய “ என்று அவள் உறவினர் சிலர் கூறியது இன்னும் அவமானமாய் தோன்றியது. அந்த வார்த்தையை கேட்ட இவன் பக்கத்து உறவினர் ஒருவர் “ எதுக்கு டாக்டரிடம் போகணும்.உன் பொண்டாட்டிய அனுப்பு “ என்ற தடித்த வார்த்தை இட பிரச்சனை திசைமாறி யாரோ ஒரு அறிவாளி தந்த யோசனையில் சண்டையின் இறுதியில் அது வரதட்சனை கொடுமை என்ற கேஸாக போலீஸில் புகார் செய்யப்பட்டு டேனியின் இல்லறம் என்னும் கோப்பை சுக்குநூறாய் உடைந்து போனது. 

கடைசியில் விவாகரத்தில் முடிந்து அவள் அவளுடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு கட்டி வைக்கப்பட்டாள். 

நீண்ட மாதங்களுக்கு பின் டேனியின் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவளுக்கும் அவனுக்கும் இடையே காதல் இருந்ததாகவும். திட்டமிட்டே அவள் அப்படி நடந்து கொண்டாள் என்றும். 

அவர்கள் அதை அறியும் வரை அவன் உறவினர்கள் சிலரும் கூட “ மத்த பசங்க மாதிரி துருதுருன்னு இருக்கமாட்டான். நான் அப்போவே நினச்சேன் இவன் ஏன் இப்படி அசமந்தமா இருக்கான்னு “ என்று பேசி திரிந்தார்கள். 

டேனி தாடி வைத்திருந்தான். இன்னும் குறுகி போனான். தெருவில் தலைகுனிந்தே நடந்தான். நிறைய தனிமையில் அழுது நிறைய இறுகி போயிருந்தான். அவன் எண்ணம் எல்லாம் அவளை எப்படியாவது கொல்ல வேண்டும் என்றே இருந்தது.

அந்த நேரத்தில் தான் அவனுடைய வெளிநாட்டில் வசிக்கும் பால்ய நண்பனை தற்செயலாய் பெட்ரோல் பல்கில் சந்திக்க நேர்ந்தது.

“ என்னடா..........டேனி. பிச்சக்காரன் மாதிரி இருக்க. என்னாச்சு “ 

அவனின் கிண்டல் வார்த்தையை டேனி ரசிக்காமல் தலை குனிந்து ஒன்றும் பேசாமல் செல்வதை கண்டு வருத்தமுற்றவனாய் மறுநாள் டேனி வீடு நோக்கி சென்றான் அவன் பால்ய நண்பன். 

முழுவதுமாய் எல்லாம் அறிந்த பின் அடிக்கடி அவனை சந்தித்து ஒரு நாள் மிகவும் வற்புறுத்தி டேனியை அழைத்து கொண்டு கடற்கரை சென்றான் அவன். 

அது ஒரு பௌர்ணமி இரவு. இரவு 10 மணி. நிலா வெளிச்சத்தில் கடல் அழகாய் தெரிந்தது. 
Photo
ஒரு பிளாஸ்டிக் விரிப்பை மணலில் விரித்து டேனிக்கு எப்பொழுதும் பிடித்தமான “ வாட்டு ரொட்டி / மட்டன் சாப்ஸ் / சிக்கன் லாலிபாப் / டபுள் ஆம்லேட் / வாழைப்பழம் / பெப்சி கடைசியாய் அவனை கேலி செய்ய ரெண்டு ரோஜா பாக்கு என பரப்பினான். 

அவன் எடுத்து வைத்து கொண்டிருக்க டேனி கடலையே பார்த்துக்கொண்டிருந்தான். 

“ மாப்ள ...........வா. சாப்பிடுவோம் “

“ ம் .............”

“ ஏண்டா லூசுப்பயலே..........அவா ஆம்பளையா .........நீ ஆம்பளையா “

“ அவளை பத்தி எதுவும் பேசிராத. நான் அதுல இருந்து வெளிய வர நினைக்கேன் “

“ எழவு அதைத்தானே நானும் சொல்லுறேன். ஒரு ஆம்பளையா நீ என்ன செஞ்சிருக்கணும். அவளை கொன்னிருக்கணும் அதை விட்டு பைத்தியக்காரன் மாதிரி திரியிற “

அவன் சொன்ன “ அவளை கொன்னிருக்கணும் “ என்ற வார்த்தை டேனிக்கு பிடித்திருந்தது. உள்ளுக்குள் ஏதோ உற்சாகம் கிளம்ப அவனுடன் சேர்ந்து சாப்பிட துவங்கினான். 

சாப்பிட்டு முடித்ததும் டேனியின் பேச்சு எல்லாம் அவளை கொல்லுவதை சுற்றியே வந்தது. 

“ கொன்னுட்டு என்ன செய்யப்போற “

“ ஜெயிலுக்கு போவேன் “
Photo
“ நல்ல லட்சியம். உன்னை கிறுக்கனாக்கிட்டு உன் கண்ணு முன்னாடியே அவா வாழ்கையை அனுபவிக்கிறா. அதையே ஏன் உனக்கு அனுபவிக்கனும்ன்னு தோணலை. கொஞ்சமாவது “ நான் “ங்கிற சுயநலம் வேணும்டா. இவ்வளவு நாள் சம்பாதிச்சியே நீ எதையாவது அனுபவிச்சிருக்கியா. அட்லீஸ்ட் அந்த பொண்ணு சொன்னாளே. அதுக்கு லாயக்கில்லைன்னு அதையாவது செஞ்சு பார்த்திருக்கியா. 

நல்லா சம்பாதிக்கிற. உனக்கு ஒரு குறையும் இல்லைன்னு உனக்கே தெரியும். அப்புறம் ஏன்டா அவா சொன்னதையும் மத்தவங்களையும் நினச்சுகிட்டு இருக்க. உனக்குன்னு ஒரு ஆசையும் இல்லையா. ஒன்னு சொல்லட்டா நீ அவளை கொல்லணும்ன்னு நினைச்சுக்கிட்டு திரியிற. உன் பேச்சை பார்த்தா அது நல்லா தெரியுது. ஆனா உன் குணத்துக்கு அது செய்யவே முடியாது. திரும்பவும் அவா முன்னாடி எதையாவது ஏடாகூடமா செஞ்சு அவமானப்பட்டு நின்னுராத. அது இன்னும் அசிங்கமா போயிரும். அப்புறம் உன் இஷ்டம் “ இன்னும் நிறைய பேசி இருவரும் வீடு திரும்பும் போது மணி 12 ஆகி இருந்தது. 

மறுநாள் அந்த வெளிநாட்டில் வாழும் பால்ய நண்பன் அவன் கடைக்கு வந்திருந்தான் கையில் மூன்று புத்தகங்கள் உடன்.

“ இந்தா ..........”

“ என்னதிது .................”

“ சாரு நிவேதிதா எழுதின புஸ்தகம் - தேகம் / சீரோ டிகிரி / ராசாலீலா. ஒரு பொம்பளைய எப்படி எல்லாம் வர்ணிக்க முடியுமோ அப்படி எல்லாம் வர்ணிச்சு இருப்பார். உனக்கு உள்ளுக்குள்ளே பொண்ணுங்க மேல கோவம் வெறுப்பு பகைன்னு இன்னும் நிறைய எண்ணம் நிறைஞ்சு கிடக்கு. சும்மா நேரம் போகலைன்னா இதை வாசி. மனசு மாறும். அதை அனுபவிச்சி தான் பார்ப்போமேன்னு தோணும். அப்படி தோணிச்சின்னா நீ எதுக்கு லாயக்கில்லைன்னு சொன்னாளோ அதை செஞ்சு பாத்திரு.” புத்தகத்தை கொடுத்திவிட்டு சென்று விட்டான். 

நிறைய யோசித்து மனம் மாறி அதை கொஞ்சம் கொஞ்சமாக படித்து முடிக்க 3 மாதம் எடுத்தது டேனிக்கு.

அதற்கு அப்புறம் தான் டேனி ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கன்னியாகுமரியின் இந்த லாட்ஜுக்கு வர ஆரம்பித்தான். 

டக் ..........டக் ........டக். கதவை தட்டும் சத்தம் கேட்டு சின்ன துளை வழியே பார்த்துவிட்டு கதவை திறந்தான். சிரித்தபடி அவள் உள்ளே நுழைந்தாள். 

ஒருவேளை LUCY பிந்தர் கேரளாவில் பிறந்திருந்தால் இவளை போலத்தான் இருந்திருப்பாள். இதற்குமேல் இவளை வர்ணிக்க முடியாது. காரணம் முழுசாய் வர்ணிக்க காசு கொடுக்கவேண்டியது வரும். 

இனி ஒவ்வொரு மாதமும் நடப்பதே இங்கு நடக்கும். 
Photo
அதாகப்பட்டது இருவருமாக சேர்ந்து கட்டிலை முதலிரவுக்கு அலங்கரிப்பது போல பூவால் அலங்கரித்தார்கள். 

விளக்குகள் அணைக்கப்பட்டு ரெண்டே ரெண்டு பெரிய மெழுவர்த்தி இருபக்கமும் ஏற்றப்பட்டது. 

முழுவதுமாக ஆடைகளை களைந்து டேனியின் வேண்டுகோளுக்கு இணங்க கதவை திறந்துவைத்து நன்றாக நீண்ட நேரம் குளித்தாள். 

குளிக்கும் இவளையும் இடை இடையே பௌர்ணமி வெளிச்சத்து கடலையும் அந்த பால்கனியில் இருந்தவண்ணமே டேனி ரசித்து கொண்டிருந்தான். 

குளித்து முடித்ததும் அவன் “ பேக் ”கில் கொண்டுவந்த புது விலையுயர்ந்த நைட்டியை மட்டுமே (!) அணிந்து பால்கனியில் இருக்கும் அவன் மடியில் வந்து அமர்ந்து கொண்டாள். 

“ சாப்பிட என்ன சொல்ல “ மடியில் அமர்ந்தவளிடம் கேட்டான் டேனி.

“ ஏதாவது சொல்லுங்க .....உங்க இஷ்டம் “ 
Photo
“ சரி ..........”

“ ஏன் புதுசா பார்க்கிற மாதிரி என் மூஞ்சையே பார்க்கிறீங்க “

“ ஒன்னும் இல்ல “ என்றவன் தான் கன்னியாகுமரி வருவதாக சொல்லி இவளை வரவழைக்க ப்ரோக்கருக்கு போன் செய்தபோது ப்ரோக்கர் “ தம்பி .......என்ன சொக்குபொடி போட்டீங்க. அந்த பொண்ணு வேற கஸ்டமர் கூப்பிட்டா போறதே இல்ல. நீங்க வந்தா மட்டும் கூப்பிட்டா போதும்ன்னு சொல்லிருச்சு. விசாரிச்சதுல வேற யார் கூப்பிட்டாலும் போறதில்ல தெரிஞ்சிகிட்டேன். சில நேரம் சாப்பிட காசு இல்ல ஒரு 500 ரூபா இருந்தா தாங்கண்ணேன்னு அவர் வரும்போது கழிச்சுக்கோங்கன்னு சொல்லி கேக்குது. மனசுக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு தரவேண்டாம் அந்த பொண்ணுக்கு முடிஞ்சா கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு கொண்டுங்க தம்பி. தம்பி நான் சொன்னேன்னு சொல்லிராதீங்க அசிங்க அசிங்கமா திட்டிபுடும் ” கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. 

“ என்ன யோசன “

“ ஒண்ணுமில்ல “ விரும்பி கட்டி அணைத்து கொண்டான் அவளை..!

Bookmark and Share

Tuesday, August 15, 2017

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு

ஏண்ணா.. பால் பாக்கெட் போட்டுட்டான்னானு பாருங்கோ..

இல்லையேடி.. எல்லார் ஆத்துலேயும் போட்டுட்டு கடைசில தான் நம்மாத்துக்கு வர்றா..

அறுபது வயதிற்கு மேற்பட்ட தமிழ் நாட்டு பிராமணர்களின் வயிற்றிற்கு எரி பொருள் காப்பி தான்.. கார்த்தால ஒரு தடவை . அதே போல் மத்யானம் மூணு மணிக்கு ஒரு தடவை. ஒரு வாய் காபி உள்ளே போனால் தான் அன்னிக்கு வேலையே நடக்கும். குறிப்பாக ஆண்களுக்கு.
Photo
காபி …அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி , சிலருக்கு சிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும் சுட சுட அரைச்சு வாங்கணும்.. எவர்சில்வர் பில்டரில் குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும்.. சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும். அதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூட தட்டி விட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.

அந்த கால கூட்டு குடும்பங்கள் , பெரிய சம்சாரிகள் வீட்டில் இரண்டாவது டிகாக்ஷன் தான் எல்லாம். முதல் டிகாக்ஷனில் குடும்ப தலைவருக்கு மட்டும் ரகசியமாக தயாரிக்கபடும். இன்றைய காஃபி மேக்கர்களெல்லாம் ஃபில்டருக்கு இணையாகாது.

பழைய திரைப்படங்களில் 'பிறாமணாள் காபி க்ளப்' என்ற போஸ்டரை அதிகம் பார்க்க முடியும்

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்கள் ஸ்ரீரங்கம் ரெங்க பவன் ஹோட்டல் காப்பி மிகவும் பிரசித்தம்..அவர்களே கூட பிரத்யேகமாக ரெங்கநாயகி காபி என்று ஒரு கடை வைத்து இருந்தார்கள்..எனது சீனு மற்றும் ராமநாதன் பெரியப்பாக்கள் வெளியூரிலிந்து வருபவர்கள் .டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கி ரங்க பவனில் ஃபர்ஸ்ட் கிளாஸ் காப்பி கொடுத்தாம்பா என்று ஸ்லாகிப்பதை கேட்டு இருக்கிறேன். ஒரு சிறிய டபராவின் உள்ளுக்குள்ளே சூடு இறங்காமல் இருப்பதற்காக ஒரு குட்டி டம்ப்ளரை கவுத்து காபியை கொடுக்கும் வழக்கம் இன்றும் பல ஊர்களில் இருக்கின்றது.. மிக ஜாக்கிரதையாக அதை பிரித்து டபராவில் கொட்டி ஆற்ற வேண்டும். இல்லையெனில் மேலே சிந்தும் அபாயம் உண்டு. இன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் காந்தி சிலை அருகே முரளி கடை ஒன்றில் தான் காபி சொல்லி கொள்ளும்படியாக இருக்கிறது .

காப்பி போடுவது என்பது ஒரு கலை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை பெரிதாக ஆற்ற வேண்டும். நல்ல சூடு அதன் சிறப்பு.. நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு .அளவாக சர்க்கரை போட வேண்டும்.இந்த சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எல்லாம் அதன் சுவையை மங்க செய்து விடும். ஒரு மிதமான கசப்பு தான் அதன் தனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும் நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.சில பிரகிருதிகள் அதனுடன் சேர்ந்து மருந்து மாத்திரையை எடுத்து கொள்ளும்போது , ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று சொல்ல தோன்றும்.
Photo
காலையோ , மதியமோ பரபரப்பு இல்லாமல் குடிக்க வேண்டும்.
ம்..' மேலே படிக்க போறானா இல்லை வேலைக்கு போக போறானா?; ', என்ன இருந்தாலும் அவா சுப்பிணியை கல்யாணத்துக்கு கூப்பிடாதது தப்பு தான்' - இப்படி சில வம்பு சம்பாஷனைகளையும் சேர்த்து கொண்டால் காப்பி கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதெல்லாம் மிடில் கிளாசுக்கு தான். கொஞ்சம் வசதி இருந்தால் போர்ன்விட்டா,ஓவல்டின் என்று தடம் மாறி விடுவார்கள். அப்படியே காப்பி சாப்பிட வேண்டி இருந்தால் , பையன் கறுப்பாகி விடுவானோ என்ற பயத்தில் அம்மாக்கள் நிறைய பால் விட்டு வெள்ளை காப்பி ஆக்கி விடுவார்கள்.. அவன் படித்து விட்டு பின்னாளில் இஞ்சினியர் ஆகி ராமகுண்டத்தில் இருந்து கறு கறு என்று வருவான் என்பது வேறு விஷயம் .

#சிரிக்கலாம்வாங்க

காப்பியை டம்ளர் டபராவில் குடித்தால் தான் அது ருசிக்கும்.. இந்த கப் அண்ட் சாசர் எல்லாம் டீ யிற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம், காபிக்கு அல்ல.. திருச்சியில் பத்மா கபே என்று ஒரு ஓட்டல் உண்டு. ஆர் ஆர் சபா சமீபம் . அங்கே இன்ன பிற அயிட்டங்கள் இருந்தாலும் , அதன் காபிக்கு தான் மவுசும் கூட்டமும்...பிற்காலத்தில் திருச்சியில் அபிராமி , காஞ்சனா போன்ற ஹோட்டல்களில் ஓரளவு தரமான காப்பி கிடைத்து வந்தது..

இந்த ப்ரு, நெஸ்கா ஃ பே எல்லாம் ஹனி மூன் தம்பதியரின் அசதிக்கும் , விளம்பரத்துக்கும் மட்டும் தான் சரியாக வரும்.

திடீர் என்று ஒரு நாள் எங்கள் மாரீஸ் தியேட்டரில் இடைவேளையின் போது புஸ் புஸ் என்று சத்தம் போட்டு ஒரு இரும்பு கம்பிக்குள் காப்பி கப்பை செலுத்தினார்கள்.. நிறைய நுரையுடன் பாலாக ஒரு காபி வந்தது. எஸ்ப்ரெசோ என்று அழைத்தார்கள். ஆர்வ மிகுதியில் உடனே குடிக்க போக சூட்டில் நாக்கு பற்றி கொண்டது.

சென்னையில் தி நகர் பஸ் நிலையம் அருகில் இந்தியா காப்பி ஹவுஸ் என்று ஒரு கடை இன்றும் இருக்கிறது..ஒரு காலத்தில் புகழ் பெற்றது.அங்கே ரயில்வே ஐ ஆர் ஆர் போல வெள்ளை பீங்கான் கப்பில் தான் காப்பி . ஆனால் சகாய விலையில் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளை கேட்டு பாருங்கள் . காலையில் வெறும் வயிற்றில் ரத்தம் கொடுக்க க்யூவில் நின்று ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு காப்பி குடித்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி சொல்லி மாளாதது..
Photo
அதிகமாக காபி விளையும் கர்நாடகாவில் கூட காபியின் சுவை என்னை பொறுத்தவரை சுமார் தான். உடுப்பியும் , காமத்தும் ஓரளவு சொல்லி கொள்ளும்படியான ஹோட்டல்களாக இருந்தாலும் , நம்ம ஊர் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு நாக்கை அடகு வைத்தவர்களால் ஒருவித தயக்கத்துடன் தான் அவைகளை ஏற்று கொள்ள முடியும் ..

கல்யாணங்களில் காபியின் தரம் என்பது திருமண உறவையே அசைக்கும் வல்லமை பெற்றது.

சுடு தண்ணி சுடு தண்ணி என்று திட்டிக்கொண்டே எல்லோரும் ரயிலில் வரும் காப்பியை குடிப்பது தவிர்க்க முடியாதது..ஒரு காலத்தில் மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் தரமான காப்பி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

தலையெழுத்தே என்று குடிக்கும் காப்பி என்றால், இரண்டை சொல்லலாம் ஒன்று விமானங்களில் கொடுக்கப்படுவது..மற்றொன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூம்களில் நாமே கெட்டில் பயன்படுத்தி தயாரிப்பது.. விமானங்களில் ஒரு முழு கப்பிற்கு டிகாக்ஷன் கொடுத்தாலும் , ஒரு குட்டி குமிழிலிரிந்து சொட்டு பாலை கலப்பதற்குள் ஆறி தொலைத்து விடும்..மற்றொன்று பால் பவுடர் வகையை சேர்ந்தது.
Photo
இன்றைய நவீன உலகில் வய் ஃபை தேடி அலையும் இளைஞர்களுக்கு கடலை போடுவதற்கு வசதியாக இருபது கஃபே காபி டே. லாட்டே , காபுசினோ என்று வகையறாக்களுக்கு தொண்ணூறு ரூபாய் வாங்கினாலும் அதன் சுவை அங்கே கூட்டி கொண்டு செல்பவரை பொருத்தது.

ஹௌ ஆர் யு டூயிங் டுடே என்று கூறி அறிமுகமில்லாதவரிடமும் சிரித்தால் , அது அமெரிக்கா..

எ காபுசினோ .. டால்(பெரிது)....

மில்க் ?..

நோ தேங்க் யூ…

ஒரு குண்டு பீப்பாய்காரி உங்கள் ஆர்டரையும் , பெயரையும் ஸ்கெட்ச் கொண்டு ஒரு பெரிய பேப்பர் கப்பில் எழுதி காப்பி தயாரித்து கொடுத்தால் அது ஸ்டார் பக்ஸ்.. கை சுடாமல் இருப்பதற்காக ஒரு பேப்பர் மேலுறையை நீங்கள் சொருகி கொண்டு மேலுக்கு ஒரு மூடியை எடுத்து கொள்ள வேண்டும் .

எவ்வளவு தான் #காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு .

'டொங்க்' என்று டம்ப்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசி பலனை தெரிந்து கொண்டு விடலாம் -

'நெருங்கிய உறவினர்களால் தொல்லை'
Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)